செய்யாறு அருகே கோவிலூர் கிராமத்தில் கி.பி. 19ம் நூற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டு கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமத்தில் ஏரிகண்மாய் அருகில் ஆங்கிலேயர் கால பொதுப்பணித்துறை பயணியர் தங்கும் பங்களா பாழடைந்த நிலையில் உள்ளது. இதன் நுழைவு வாயில் எதிரே சிதைந்த நிலையில் கி.பி. 19ம் நூற்றாண்டை சேர்ந்த சுமைதாங்கி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வகுமார் கூறியதாவது: நெடுந்தூரம் கால்நடையாய் பயணிக்கும் நபர்கள் தலைச்சுமையை இறக்கி சுமைதாங்கி கல்லின் மீது வைத்துவிட்டு சற்று இளைப்பாறி பயணத்தை மீண்டும் தொடர்வார்கள். அந்த வகையில் சுமைத்தாங்கி கல்லை கொடையாக நிறுவி, அதில் அவர்களின் ஊரும், பெயரும் செதுக்கி வைத்துள்ளனர்.

இந்த சுமைதாங்கி கல்லை கோவிலூர்பேட்டையை சேர்ந்த குசேலன், முனிசாமி ஆகியோர் கொடையாக வழங்கியதாக கல்லில் பதியப்பட்டுள்ளது. எழுத்துக்கள் தேய்ந்து காணப்படுகிறது. தெளிவாக தெரியவில்லை. சுமைதாங்கி கல்லின் 2 பாகங்கள் சிதறிய நிலையில் கிடக்கிறது. 3வது கல் காணவில்லை. எழுத்துக்கள் தொடர்ச்சியாகவும் இல்லை. காணாமல் போன கல்லிலும் தகவல்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. பொது வெளியில் சுமைதாங்கி கல்லை நிறுவி, அதில் கொடையாளர்கள் பெயர்களை பொறித்து வைத்து உதவிகள் செய்தது இக்கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. மேலும், அப்பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: