மழை ஓய்ந்ததை அடுத்து நெடுஞ்சாலைகள் பழுது பார்க்கும் பணி தீவிரம்: குடிநீர் வடிகால் வாரியத்தால் பரிதாப நிலையில் பாலமோர் சாலை

நாகர்கோவில்: குமரியில் பருவமழை சில நாட்களாக நின்றதால், சாலைகள் பழுது பார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குமரியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விடாமல்  தொடர்ச்சியாக தினசரி மழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக மாவட்டம்  முழுவதும் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.  இதில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் பாலமோர் சாலையில் கடந்த 3  வருடங்களுக்கும் மேலாக தங்களது பணிகளை செய்யாமல் உள்ளதால், அந்த சாலை  மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பல உயிர்களை பழிவாங்கிய  பின்னரும் கூட குடிநீர் வடிகால் வாரிய அலட்சியம் காரணமாக பாலமோர்  சாலை  முற்றிலும்,

பழுதுபார்க்க முடியாமல், ஆங்காங்கே மரண பள்ளங்களுடன்  காணப்படுகிறது. தற்போது பெய்த மழையினால், புத்தேரி, இறச்சகுளம் இடையிலும்,  இறச்சகுளம் சுடலைமாட சுவாமி கோயில், நாவல்காடு சந்திப்பு, நங்காண்டி  சந்திப்பு, ஈசாந்திமங்கலம் பகுதிகளிலும் சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள்  காணப்படுகின்றன. ஈசாந்தி மங்கலம் முதல் துவரங்காடு, திட்டுவிளை  என தடிக்காரன்கோணம் வரை குடிநீர் வடிகால் வாரிய பணிகள் காரணமாக சாலை  மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை விட்டதை அடுத்து,  இரவில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் பழுது  பார்க்கப்பட்டு வருகின்றன.

பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த,  வடசேரி சந்திப்பு முதல் அண்ணா பஸ் நிலையம் வரையிலும், பொதுப்பணித்துறை சாலை  என நகருக்குள் 3 முதல் 4 கி.மீ வரை சாலைகள் பழுது பார்க்கப்பட்டுள்ளன.  இனிமேல், வடசேரி சந்திப்பிலிருந்து பாலமோர் சாலையில் பழுது பார்க்கும்  பணிகள் தொடங்க உள்ளன. இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம்  கேட்டபோது, நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர்  திட்ட பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், எங்கள் சாலைகளை பழுது  பார்த்துள்ளோம்.  தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் பழுது பார்க்கும்  பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இரண்டு முதல் 4 நாட்களுக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் 5 ஆண்டுகள் முடிவடைந்த சாலைகள்  மீண்டும் சீரமைக்க நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால் ஒரு சில மாதங்களில் அனைத்து சாலைகளும், புதிய சாலைகளாக மாறிவிடும் என்றனர்.

Related Stories: