விஜய் ஹசாரே டிராபி 1 ரன் வித்தியாசத்தில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி: புதுச்சேரி உற்சாகம்

திருவனந்தபுரம்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், புதுச்சேரி அணிக்கு எதிராக தமிழகம் டி/எல் விதிப்படி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தும்பா, செயின்ட் சேவியர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியதால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

ராமச்சந்திரன் ரகுபதி 29, சுபோத் பட்டி 20, கேப்டன் தாமோதரன் ரோகித் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க, புதுச்சேரி அணி 33.1 ஓவரில் 147 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்நிலையில், பபித் அகமது - பரத் ஷர்மா இணைந்து கடைசி விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் புதுச்சேரி அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது. பபித் அகமது 87 ரன் (84 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), பரத் ஷர்மா 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உதிரியாக மட்டுமே புதுச்சேரி அணிக்கு 26 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 10 ஓவரில் 48 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். சிலம்பரசன் 2, சித்தார்த், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, டி/எல் விதிப்படி 44 ஓவரில் 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஹரி நிஷாந்த் 19 ரன், சுந்தர், இந்திரஜித் தலா 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். தமிழகம் 69 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற, கேப்டன் நாராயண் ஜெகதீசன் - தினேஷ் கார்த்திக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 90 ரன் சேர்த்தது. கார்த்திக் 65 ரன் (72 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தேஷ்பாண்டே பந்துவீச்சில் திரிவேதி வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ஷாருக் கான் 8 ரன், ஜெகதீசன் கவுசிக் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். கடுமையாகப் போராடிய நாராயண் 64 ரன் எடுத்து (103 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்க, தமிழக அணி பின்னடைவை சந்தித்தது. முகமது 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, சாய் கிஷோர் 7 ரன்னில் ரன் அவுட்டானார். தமிழக அணி 44 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து, 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

 சித்தார்த் (4), சிலம்பரசன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாண்டி பந்துவீச்சில் பபித், பரத் தலா 2, சுபோத், திரிவேதி, சாகர், தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். புதுச்சேரி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. முதல் 3 போட்டியிலும் அமர்க்களமாக வென்றிருந்த தமிழகம், 4வது லீக் ஆட்டத்தில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை வீணடித்தது. பபித் அகமது ஆட்ட நாயகன் விருது பெற்றார். எலைட் பி பிரிவில் உள்ள 6 அணிகளும் தலா 4 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில், தமிழகம் (12) தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கர்நாடகா (12), பெங்கால் (8), புதுச்சேரி (8), பரோடா (4), மும்பை (4) அடுத்த இடங்களில் உள்ளன.

Related Stories: