திருவள்ளூரில் மெகா தடுப்பூசி முகாம் ஆய்வு தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு இல்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்

திருவள்ளூர்: உலகத்தில் பல இடங்களில் ஓமிக்ரான் இருந்தாலும், தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவள்ளூர் அடுத்த 26. வேப்பம்பட்டு ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடுப்பூசி போட வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்பேரில் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 81.4 சதவீதம் பேரும் முதல் தவணையும், 47.2 சதவீதம் பேர் இரண்டாவது தவணை ஊசியும் போட்டுள்ளனர். தற்போது தடுப்பூசி போடும் பணியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். உலகத்தில் பல இடங்களில் ஓமிக்ரான் இருந்தாலும், தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் அலட்சியம் கொள்ளாமல் தடுப்பூசியை தாமாக முன்வந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சென்னையில் 65% விழுக்காடு மக்கள் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிவது மிகவும் வேதனை அளிக்கிறது. பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது தமிழகத்தில் ஓமிக்ரான் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று விதிமுறைகளை மீறியதாக 47 லட்சம் பேருக்கு 101கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. எனவே தமிழக மக்கள் தொற்று குறைகிறது என்று அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டாம். பொது மக்கள் தாமாக முன்வந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார வளர்ச்சி அலுவலர் ரா.வெங்கடேசன், ஊராட்சி தலைவர் சதா பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: