குடியாத்தம் அரசு பள்ளியில் மழை நீரில் சேதமான பாட புத்தகங்கள்

குடியாத்தம் : குடியாத்தம்  அரசு பள்ளியில் புகுந்த மழைநீரில் ஆவணங்கள், பாட புத்தகங்கள் ஆகியவை நனைந்து சேதமானது. தமிழக- ஆந்திர எல்லையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் குடியாத்தம்  மோர்தானா அணை நிரம்பி, சேம்பள்ளி அக்ரஹாரம் ஆகிய ஏரி கால்வாய்கள் வழியாக கவுன்டன்யா மகாநதி, நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து இருகரை தொட்டபடி  புரண்டு சென்றது. இதில் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திற்குள் சுமார் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.

இதனால் பள்ளி தலைமையாசிரியர் அறை, அலுவலகம், வகுப்பறை, சத்துணவு கூடம் ஆகியவற்றில் இருந்த பொருட்கள், கோப்புகள் ஆகியவை மழைநீரில் சேதமானது. குறிப்பாக தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பாட புத்தகங்கள், மாணவர், ஆசிரியர் வருகை பதிவேடுகள், புத்தகப்பைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை தண்ணீரில் சேதமானதாக கூறப்படுகிறது.

மேலும், மழை ஓய்ந்த நிலையில் அவற்றை தினசரி வெயிலில் உலர வைக்கும் பணி நடந்து வருகிறது.

அலுவலக அறையில் இருந்த 3க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமாகி உள்ளது. அதனை பழுது பார்க்கும் பணிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள சத்துணவுக்கூட கட்டிடத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இவற்றை அதிகாரிகள் பார்வையிட்டு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: