உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு தகவல் பொய்யானது

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு இருக்கிறது என்ற தகவல் பொய்யானது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி நீரை தேக்க வேண்டும் என்ற முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும் என உத்தவிட்டுள்ளது. இந்த நிலையில் சேவ் கேரளா மற்றும் பிரிட்ஜ் கேரளா என்ற அமைப்பு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் மற்றும் உமாபதி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில்,‘‘அணையில் நீர்கசிவு ஏற்படுவதாக மனுதாரர் கூறும் கூற்று பொய்யானது. முல்லைப் பெரியாறு அணையில் 50 லட்சம் மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர் என கூறுவதும் பொய்யாகும். மேலும் அணையில் 142 அடி நீரை தேக்கினாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் அணைக்கு பெருவெள்ளம், நில அதிர்வு உள்ளிட்ட இயற்கை இடர்களை தாங்கும் வலிமை உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் பிரதான மனுதாரரான ஜாய் ஜோசப் உட்பட முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு  தகவல் கொடுக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: