ராமகுப்பம் அடுத்த பந்தார்லப்பள்ளியில் விவசாய நிலத்தை துவம்சம் செய்து 3 காட்டுயானைகள் அட்டகாசம்-கிராமத்திற்குள் வருவதை தடுக்க கோரிக்கை

திருமலை : ராமகுப்பம் அடுத்த பந்தார்லப்பள்ளியில் விவசாய நிலத்தை துவம்சம் செய்து 3 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. மேலும், கிராமத்திற்குள் யானைகளை வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமகுப்பம் அடுத்த பந்தார்லப்பள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, மா, தென்னை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.

விவசாய விளை நிலங்களை அவ்வப்போது காட்டுயானைகள் வந்து நாசம் செய்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 3 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து நெல், வாழை மற்றும் மா மரங்களை துவம்சம் செய்தது. அப்போது, அங்கிருந்த அப்பகுதிமக்கள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை விரட்டி அடித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘யானைகள் கூட்டம் சாலையில் சுற்றித்திரிந்தாலும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து, விவசாய விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. சில நேரங்களில் வனத்துறையினர் வந்து யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் விரட்டி அடித்து வருகின்றனர். ஆனால், நாங்கள் தகவல் அளிக்கும் சில சமயங்களில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவதில்லை.

யானைகள் எப்போது எங்களை தாக்கும் என தெரியாமல் நாங்கள் பீதியில் உள்ளோம். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்குள் யானை கூட்டம் எங்கள் பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மின்சாரம் தாக்கி யானை பலி

பங்காருபாளையம் அடுத்த வேப்பனப்பள்ளியில் உள்ள ஏரி அருகே சுப்பிரமணியம் என்பவரது விவசாய விளை நிலத்தில் வன விலங்குகள் வராமல் இருக்க மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் வேலியில் சிக்கி நேற்று காட்டுயானை ஒன்று உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த சித்தூர் மேற்கு வனசரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கால்நடை மருத்துவர்களை மூலம் உடல்கூறு பரிசோதனை செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: