பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட் சஜித் கான் சுழலில் வங்கதேசம் திணறல்

டாக்கா: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 76 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறி வருகிறது.தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் 2 நாள் ஆட்டமும் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 3வது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 300 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.தொடக்க வீரர்கள் அபித் அலி 39, அப்துல்லா ஷபிக் 25 ரன்னில் வெளியேறிய நிலையில், அடுத்த 4 பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்தனர். அசார் அலி 56, கேப்டன் பாபர் ஆஸம் 76 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பவாத் ஆலம் 50, முகமது ரிஸ்வான் 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் 2, காலித் அகமது, எபாதத் உசேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய வங்கதேசம், 4ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்துள்ளது. நஜ்முல் உசேன் 30 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். ஷாகிப் அல் ஹசன் 23, தைஜுல் (0) களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் சஜித் கான் 12 ஓவரில் 3 மெய்டன் உள்பட 35 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். வங்கதேசம் பாலோ ஆன் பெற்றால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டியிருக்கும் என்ற பரபரப்பான நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: