அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து திணறி வருகிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸி, அபார வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் கடந்த 17ம் தேதி துவங்கியது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில், 2ம் நாளான நேற்று ஆஸி அணியின் முதல் இன்னிங்சை தொடர்ந்த மிட்செல் ஸ்டார்க் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக, நாதன் லியான் 9 ரன்னில் வீழ்ந்தார். அதனால், 91.2 ஓவரில் ஆஸ்திரேலியா 371 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதன் பின், முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து வீரர்கள் வழக்கம் போல மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 9 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஒல்லி போப் 3 ரன்னில் அவுட்டானார். பின் வந்த வீரர்களில் ஹேரி புரூக் 45, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 45 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், இங்கிலாந்து அணி பரிதாபமாக காட்சி அளித்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 45, ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3, ஸ்காட் போலண்ட், நாதன் லியான் தலா 2, கேமரூன் கிரீன் 1 விக்கெட்டுகளை சாய்த்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
