உரம் தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை: பிரதமர் மோடி பேச்சு

கோரக்பூர்: நாட்டில் மூடப்பட்டுள்ள உர நிறுவனங்களை புனரமைத்து உரத் தயாரிப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உரத் தயாரிப்பு நிறுவனம், எய்ம்ஸ், மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகிய, ரூ.9,600 கோடி செலவிலான 3 பிரமாண்ட திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு வரையில் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் நாடு இருந்தது. நாடு முழுவதும் உரத்தட்டுப்பாடு என்பது தலைப்பு செய்தியாகவே இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. யூரியா தவறான வழிகளில் பயன்படுவதை அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. என்ன வகையான உரம் விவசாயிகளுக்கு தேவை என்று தெரிந்து கொள்ளும் வகையில், மண் சுகாதார அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்டுள்ள உர நிறுவனங்களை புனரமைத்து நாட்டில் உரத்தயாரிப்பை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆயுதப்படை வீரர்களின் தைரியம் போற்றத்தக்கது

ஆயுதப்படையின் கொடி நாளான நேற்று அவர்களை வாழ்த்தி பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘நாட்டின் எல்லையை பாதுகாப்பதில் ஆயுதப்படை வீரர்களின் தைரியம், விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றின் பங்கு அளப்பரியது மட்டுமன்றி போற்றுதலுக்குரியது. நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் தேசப்பற்றை நினைவு கூற வேண்டும். அவர்களின் அற்புத சேவைக்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆயுதப்படை வீரர்கள் நல்வாழ்வுக்காக கொடிநாள் நிதியை மக்கள் தாராளமாக வழங்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

சிவப்பு தொப்பி; ரெட் அலர்ட்

கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘உபி மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும், சிவப்பு தொப்பி அணிந்தவர்கள் ரெட் அலர்ட் போன்றவர்கள். இவர்களுக்கு மக்களின் வலியும், துயரமும் தெரியாது. சிவப்பு தொப்பிகாரர்களுக்கு ஊழல் செய்வதற்கு அதிகாரம் தேவைப்படுகிறது. தங்கள் கஜானாவை நிரப்பி கொள்ளவும், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தின் கனிமவளங்களை சுரண்டவும், மாபியா கும்பலுக்கு முழு சுதந்திரம் வழங்கவும் அவர்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அரசை அமைத்து அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க சிவப்பு தொப்பிகாரர்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. எனவே, சிவப்பு தொப்பி அணிந்தவர்கள், மாநிலத்துக்கு ரெட் அலர்ட் என்பதை மக்கள் உணர வேண்டும்,’ என்று கூறினார். சமாஜ்வாடி கட்சியைதான் அவர் இவ்வாறு மறைமுகமாக தாக்கி பேசினார்.

Related Stories:

More