பீகாரில் தடுப்பூசி செலுத்தியவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா காந்தி பெயர்கள் இடம்பெற்றதால் பரபரப்பு..!!

பாட்னா: பீகார் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பெயர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாமலேயே பல்வேறு மாநிலங்களில் முறைகேடாக பலர் சான்றிதழ்களை பெற்று வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற புகார்கள் குறித்து மாநில அரசுகள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ள நிலையில், பீகார் மாநிலம் அர்வல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அர்வல் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே முறைகேடாக சான்றிதழ் பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து புகார் அளிக்க தமிழ்நாட்டில் மாவட்டத்தோரும் கண்காணிப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை நியமித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர், மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, முழு வீச்சில் நடந்துவரும் நிலையில், சிலர் தங்களுடைய ஆதார் எண்ணை மட்டும் பகிர்ந்துவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாததும், தடுப்பூசி பெறுவது போல் சான்றிதழ் பெறுவதாகவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சில சுகாதார களப் பணியாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories: