கொச்சியில் போட்டோ ஷூட் நடத்த வந்த மாடல் அழகியை லாட்ஜில் அடைத்து வைத்து 3 நாள் பலாத்காரம்: பெண் உட்பட 4 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி. இவர் விளம்பரத்திற்கு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஆலப்புழாவை சேர்ந்த சலீம்குமார்(33) என்பவரை அணுகியுள்ளார். அவர் கொச்சியில் காக்கநாடு பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்து போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 1ம் தேதி மாடல் அழகியை அழைத்து கொண்டு லாட்ஜுக்கு சென்றார். அங்கு சலீம்குமார் அவருக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை தெரியாமல் குடித்த மாடல் அழகி மயங்கி விட்டார்.

இதையடுத்து சலீம்குமார் அவரது நண்பர்கள் ஷமீர், அஜ்மல் ஆகியோர் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து 3 நாட்கள் அடைத்து வைத்து மாடல் அழகியை சீரழித்துள்ளனர். பின்னர் அவரை விடுவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அவர் இதுகுறித்து கொச்சி இன்போ பார்க் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம்குமார், அவரது நண்பர்கள் ஷமீர், அஜ்மல் மற்றும் லாட்ஜ் உரிமையாளரான பெண் கிறிஸ்டினா ஆகியோரை கைது செய்தனர்.

* போதை விருந்து; 17 பேர் கைது

திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ளது பூவார். குமரி-கேரள எல்லையை ஒட்டிய இவ்விடம் சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்குள்ள காரைக்காடு தீவில் ஒரு சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் போதை விருந்து நடப்பதாக திருவனந்தபுரம் கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 20 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு மாறுவேடத்தில் சுற்றுலா பயணிகள் போல சொகுசு விடுதிக்குள் சென்று ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இசை நிகழ்ச்சி என்ற பெயரில் போதை பொருள் சப்ளை செய்யப்படுவதும், அதில் இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கலால்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். போதை விருந்தில் கலந்து கொண்ட திருவனந்தபுரம் மாடல் அழகி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: