ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு 22ம் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்படும்: 26ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 22ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து 26ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கின. தினமும் ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகமும் நடந்து வருகிறது. தொடர்ந்து 18ம்படிக்கு படி பூஜையும் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.இதையொட்டி ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக தங்க அங்கி சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். இவ்வருடம் இந்த தங்க அங்கி ஊர்வலம் வரும் 22ம் தேதி காலையில் புறப்படுகிறது. 25ம் தேதி மதியம் 1 மணியளவில் பம்பையை அடைகிறது. பிற்பகல் 3 மணி வரை தங்க அங்கி பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

இதன்பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை 6.20 மணியளவில் சன்னிதானத்தை அடையும். பின்னர் தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் 26ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். 2 நாட்கள் தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் சபரிமலை குவிவார்கள். தொடர்ந்து அன்று இரவுடன் 41 நாள் நீளும் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்படும்.

தரிசனத்திற்கு தடை

சபரிமலையில் கடந்த 2 தினங்களாக பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருந்தது. இந்நாளில் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடியுடன் பலத்த மழை சபரிமலையில் பெய்தது. சிறிதுநேரத்தில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தரிசனம் முடிந்து வந்த பக்தர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பம்பைக்கு கொண்டு விடப்பட்டனர். மாலை 6.30 மணி வரை 2 மணிநேரம் தொடர்நது பலத்த மழை பெய்தது. இரவு 7.45 மணியளவில் தான் பம்பை ஆற்றில் வெள்ளம் குறைய தொடங்கியது.

இதன்பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் சிறிது நேரத்திற்கு மட்டுமே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாவும், இதன்பின் பக்தர்கள் எந்த சிரமும் இன்றி தரிசனம் செய்து வருவதாகவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலிமலை பாதை திறப்பு

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்வருடம் பம்பை ஆற்றில் இதுவரை பக்தர்கள் ‘பம்பா ஸ்தானம்‘ செய்ய அனுமதிக்கப்படவில்ைல. இந்த வாரத்தில் பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோல் பம்பையில் இருந்து பக்தர்கள் செல்லும் பாரம்பரிய பாதையான நீலிமலை பாதையும் இந்த வாரத்தில் திறந்து விடப்படும் என தெரிகிறது.

Related Stories: