ரூ.52 லட்சத்தில் குதிரை, ரூ.9 லட்சத்தில் பூனை, சொகுசு கார் காதலிகளுக்கு சுகேஷ் வழங்கிய காதல் பரிசுகள்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை 7,000 பக்க குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டபோது, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் தரப்பு முயன்றது. இதற்காக, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசால் டிடிவி தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், பெங்களூருவை சேர்ந்த தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. சுகேசின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், டெல்லி சிறையில் இருந்தபடியே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, ரூ.200-யை மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவருடைய  காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத் துறை விசாரித்தது. அவருக்கு காதல் பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்களை சுகேஷ் வழங்கியுள்ளார். மேலும், இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டாதால், அவரிடமும் அமலாக்கத்துறை விசாரித்தது. இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் சுகேஷ் சந்திர சேகர், அவரது காதலி லீனா மரியாபால் உள்ளிட்ட 6 பேர் மீது 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

இது பற்றி அமலாக்க அதிகாரிகள் கூறுகையில், ‘சுகேஷ் தனது மற்றொரு காதலியான ஜாக்குலினுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையை பரிசாக அளித்துள்ளார். மற்றொரு நடிகை நோரா பதேஹியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு விலை உயர்ந்த காரை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். தனக்கும் பண மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நோரா கூறியுள்ளார். அவர் எங்கள் தரப்பு சாட்சியாக இருப்பதால், விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறார். இவருக்கும் பண மோசடிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பது விசாரணையில் உறுதியாகி உள்ளது,’ என கூறியுள்ளனர்.

சுகேசிடம் ரூ.20 கோடி லஞ்சம் வாங்கிய சிறை அதிகாரிகள்

ரெலிகேர் நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிதி சிங்கிடம் இருந்துதான்ம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார். இவர், சிறையில் இருந்து கொண்டே அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு, உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகளை போல் பேசி பலரிடம் இருந்து பணம் பறித்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த சிறை அதிகாரிகள், சுகேசிடம் இருந்து ரூ20 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக, டெல்லி போலீசார் 5 பேர் சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனில் குமார், சுரிந்தர் சந்திர போரா ஆகியோர் திகார் சிறை கண்காணிப்பாளராகவும், மகேந்திரா, லக்‌ஷ்மி தத்தா ஆகியோர் துணை கண்காணிப்பாளர்களாகவும், பிரகாஷ் சந்த் உதவி கண்காணிப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் ரோகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இதேபோல் பணம் பறித்ததற்காக 2 சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் செல்ல முயன்ற ஜாக்குலின் தடுத்து நிறுத்தம்

சுகேஷ் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு, விமான நிலையங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், துபாய் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க விமானத்தில் செல்வதற்காக, மும்பை விமான நிலையத்துக்கு ஜாக்குலின் நேற்று வந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்த குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக, அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

More