விவசாயிகள் இறப்பு கணக்கு இல்லை என்பது ஆணவம்: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி:  வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது இறந்த விவசாயிகள் குறித்த கணக்கு இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவது அகந்தை செயல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான கடந்த புதனன்று டெல்லி போராட்ட களத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்தது மற்றும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வேளாண் அமைச்சகத்திடம் எந்த பதிவுகளும் இல்லை என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி கூறுகையில், ‘‘ வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்தது குறித்து எந்த கணக்கும் இல்லை என்று கூறுவது ஒன்றிய அரசின் உணர்வற்ற மற்றும் அகந்தை செயலாகும். போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்ததற்கு பஞ்சாப் அரசு பொறுப்பில்லை. எனினும் உயிரிழந்த 403 விவசாயிகளுக்கு தலா ரூ.5லட்சம் நிதியுதவியை மாநில அரசு வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்துக்கு வெளியே இறந்த 100 விவசாயிகள், பொது அறிவிப்புகள் மூலமாக பெறப்பட்ட தகவலின்படி கிடைத்த 200 விவசாயிகளின் இறப்பு பட்டியலும் உள்ளது. திங்களன்று இந்த பட்டியல் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் பார்வைக்கு வைக்கப்படும்,” என்றார்.

Related Stories: