சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் எஸ்சி வகுப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், `சித்தூர் மாவட்டம், யாதமரி மண்டலம், மாதிரெட்டி பள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்களுக்கு வழங்கும் உணவானது தரமற்ற நிலையில் உள்ளது. அதாவது உணவில், வண்டு உள்ளிட்டவை இருப்பதாக மாணவர்கள் பெற்றோர்கள் எங்களிடம் வேதனை தெரிவித்தனர். இதனால், மதிய உணவு பள்ளியில் வழங்கினாலும் சாப்பிடாமல் வீட்டிற்கு வந்து உணவு சாப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.

அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் வழங்கும் உணவை பள்ளிகூடத்திற்கு சென்று பார்வையிட்டோம். அப்போது, உணவு தரமில்லாமல் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர். அதன்பேரில், மாணவர்களுக்கு உணவு சமைக்கும் நபரை தலைமையாசிரியர் கண்டித்தார். அப்போது, அவர் இனிமேல் நான் பள்ளிக்கூடத்தில் சமைக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டு சென்று விட்டார்.

இதனால் பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் யாரேனும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து அளிக்க முன் வரவேண்டும் என தலைமையாசிரியர் கேட்டு கொண்டார். அதன்படி, எஸ்சி சமுதாயத்தை சேர்ந்த மாணவரின் பெற்றோர் மாணவர்களுக்கு உணவு சமைத்து அளிக்க முன் வந்தார். ஆனால், மாணவர்களின் ெபற்றோர் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர் வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் மாணவர்களுக்கு சமைத்து உணவு அளிக்க முன் வந்தார். தொடர்ந்து, அவர் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். ஆனால், இவர் வழங்கும் உணவும் தரமற்றதாக உள்ளதால் பல முறை கண்டித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பள்ளியில் எஸ்சி வகுப்பை சேர்ந்த தரமான  மாணவர்களுக்கு உணவு சமைத்து அளிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டோம். என்றனர்.

Related Stories: