தனியார்மயத்தை கண்டித்து 16,17ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்

புதுடெல்லி: பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க அனுமதிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்ளும் திட்டத்தின் கீழ், இந்தாண்டில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2019ல் ஐடிபிஐ வங்கியின் பெரும்பாலான பங்குகளை விற்று அதை அரசு தனியார் மயமாக்கி .ள்ளது. மேலும் கடந்த 4 ஆண்டில் 14 பொதுத்துறை வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைத்து எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் வங்கிகள் சட்டத் திருத்த நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளது. இதை கண்டித்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறுகையில், ‘‘வரும் 16, 17 என இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். எனவே பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’’ என்றார்.

Related Stories: