அமைச்சரவையில் ஒப்புதல் தந்ததும் கிரிப்டோ கரன்சி மசோதா தாக்கல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: ‘ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தில் கிரிப்டோ கரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும்,’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ‘எந்தவொரு மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி விகிதமும் எதிர்பார்த்தபடி 14 சதவீதத்தை எட்டவில்லை என்பதால், 2022ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இருக்கிறதா?’ என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `சட்டத்தில் கூறியுள்ளபடி, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு 5 ஆண்டுகள் மட்டுமே இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை முழுவதுமாக வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது,’ என்று தெரிவித்துள்ளார்.

 ``இருப்பினும், ஆடம்பர மற்றும் கேடுவிளைவிக்கும் பொருட்களுக்கு விதிக்கப்படும் செஸ் இழப்பீடு மார்ச் 2026 வரை தொடர்ந்து வசூலிக்கப்படும். இது, 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட வாங்கிய கடனை ஒன்றிய அரசுத் திருப்பிச் செலுத்துவதற்காக வசூலிக்கப்பட உள்ளது,’ என்று கூறியிருந்தார். கிரிப்டோகரன்சி குறித்த கேள்விக்கு, `குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவை அறிவிப்பின் இரண்டாவது பகுதியில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்,’ என்று அவர் பதிலளித்தார்.

Related Stories: