தண்டரை கால்வாய் கரை உடையும் அபாயம் 35 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியும் பெருங்களத்தூர் ஏரி நீர் வீணாகும் நிலை-விவசாயிகள் வேதனை

செய்யாறு :  செய்யாறு அருகே ெபருங்களத்தூர் ஏரி 35 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் நிலையில் உள்ளது. இருந்தும் ஏரியின் இடையே செல்லும் தண்டரை கால்வாய் உடையும் அபாய நிலையில் உள்ளதால் ஏரி நீர் முழுவதும் வீணாக செல்லும் நிலை உள்ளது.செய்யாறு தாலுகா, பெருங்களத்தூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி முழு கொள்ளவை எட்டி கோடி போய் 35 ஆண்டுகள் ஆகிறது. ஏரிக்கு வரும் மழைநீரானது ஏரியின் இடையே செல்லும் தண்டரை கால்வாயில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, மற்ற ஏரிகளுக்கு சென்று விடுகிறது.

தண்டரை கால்வாயின் கரையில் உள்ள மண்ணை கனிமவள கொள்ளையர்கள் லாரிகள் மூலம் தொடர்ந்து கொள்ளையடித்தன் விளைவாகவே, கரையின் உயரம் மற்றும் அகலம் குறைந்து ஏரிக்கால்வாயின் கரை பலவீனமாகி உடைப்பு ஏற்படுகிறது.மேலும், கால்வாய் உடைப்பு ஏற்படுவதால் ஏரியின் முழு கொள்ளளவிற்கு மழைநீர் சேமிக்க முடியாமல் குறைந்த அளவிலேயே மழைநீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், தண்டரை கால்வாய் கரை பலவீனம் ஏற்பட்டு மண் சரிந்ததால், மழைநீரானது கால்வாயில் இருந்து வழிந்து வெளியேறி வருகிறது.தற்போது 2 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது.

ஆனால், ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் நிலையில், கரை பலவீனமாக உள்ளதால் கால்வாயின் கரை முழுவதும் உடைப்பு ஏற்பட்டு, ஏரியில் உள்ள மொத்த நீரும் வீணாக வெளியேறும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  எனவே, உடனடியாக  கால்வாய் கரையில் பலவீனமாக உள்ள பகுதிகளில் மணல் மூட்டைகளை வைத்து கரையை பலப்படுத்த வேண்டும். மேலும், ஏரியில் நீர் வடிந்த பிறகு கோடைக்காலத்தில் தண்டரை கால்வாயின் பலவீனமான பகுதிகளில் பலப்படுத்தி ஏரியில் முழு கொள்ளளவிற்கும் மழைநீரை சேமிக்கும் வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்களும், விவசாயிகளும் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: