பாலியல் டார்ச்சரால் மாணவி தற்கொலை முயற்சி கைதான பள்ளி தாளாளர் மயங்கி விழுந்தார்: சேலம் மருத்துவமனையில் அனுமதி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்துறை பகுடுபட்டு கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக பள்ளி கராத்தே மாஸ்டர் ராஜா (46) பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி கடந்த 22ம் தேதி இரவு, வீட்டில் கைகளை அறுத்தும், சேலையால் தூக்கிட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோரை அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து மாணவியின் உறவினர்கள், கராத்தே மாஸ்டர் ராஜாவை நேற்று முன்தினம் பிடித்து கருமந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து மாணவிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த கராத்தே மாஸ்டர் ராஜா, உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோரை, போக்சோவில் போலீசார் கைது செய்து, நேற்று காலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது ஸ்டீபன் தேவராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான கராத்தே மாஸ்டர் ராஜா ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டீபன் தேவராஜ் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்.

Related Stories: