பூனையை கண்டு மிரண்டு ஓடிய யானை: 5 மணி நேரம் அல்லோகலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக மணிகண்டன் என்ற யானை உள்ளது. ஆஜானுபாகுவான இந்த யானை பெரும்பாலான கோயில் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது உண்டு. இந்நிலையில், கொல்லம் அருகே உள்ள வெட்டிக்கவலை ஸ்ரீமகாதேவர் கோயில் திருவிழாவுக்காக இந்த யானை நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலையில், யானையை அருகிலுள்ள ஆற்றில் குளிக்க வைக்க பாகன் அதன் கட்டுக்களை அவிழ்த்தார். இந்த நேரத்தில் திடீரென ஒரு பூனை வந்தது. அதை பார்த்து மிரண்ட யானை, பிளிறியபடியே அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அதிர்ச்சியடைந்த பாகன், யானையின் பின்னால் ஓடினார். முக்கிய சாலையில் நுழைந்த அந்த யானையை பார்த்து மிரண்டு போன வாகன ஓட்டிகள், வாகனங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். யானையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதியை சேர்ந்த மேலும் சில பாகன்களும் அங்கு விரைந்தனர். இவர்களின் கடும் முயற்சியின் பலனாக 5 மணி நேரத்திற்கு பின்னர், யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Related Stories:

More