3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முதல் நாளே மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் எச்சரிக்கைக்கு பணிந்தது ஒன்றிய அரசு 6 கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் புதிய கெடு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர் கால தொடரின் முதல் நாளே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை தாக்கல் செய்ய போவதாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கைக்கு பணிந்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது உட்பட 6 புதிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் இருந்து தினமும் 500 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள்  கூறியிருந்தனர். இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், டிராக்டர் பேரணி போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் அளித்த பேட்டியில், ‘‘டிராக்டர் பேரணி போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். வரும் டிசம்பர் 4ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம். அதற்குள், எங்களின் பிற கோரிக்கைகள் தொடர்பாக அரசு நியாயமான முறையில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதை பொறுத்து, டிசம்பர் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் அடுத்த கட்ட முடிவுகள் எடுப்போம்,’’ என்றார். பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் அளித்த பேட்டியில், ‘‘டெல்லி எல்லையில் நீண்ட நாட்களுக்கு போராட்டம் நடத்தும் நோக்கத்தில் நாங்கள் இல்லை. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் உடனடியாக வீடு திரும்ப தயாராக இருக்கிறோம்,’’ என்றார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நாளைய தினமே நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இல்லாவிட்டால், முதல் நாளே இந்த கோரிக்கையை வலியுறுத்தப் போவதாக எச்சரித்து இருந்தன. இந்த எச்சரிக்கைக்கு ஒன்றிய அரசு பணிந்துள்ளது. ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா கூட்டத் தொடரின் முதல் நாளான நவம்பர் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக அரசு கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது,’’ என்றார். ஆனால், இதுபோன்ற கமிட்டி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

* பயிர் கழிவு எரிப்பு குற்றமல்ல

ஒன்றிய வேளாண் அமைச்சர் தோமர் கூறுகையில், ‘‘பயிர்கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்கிறது. இனியும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்வதில் நியாயமில்லை,’’ என்றார்.

Related Stories: