மூன்றரை ஆண்டாக பாலியல் தொல்லை பிளஸ்2 மாணவி கைகளை அறுத்து தற்கொலை முயற்சி: கராத்தே மாஸ்டர், பள்ளி தாளாளர் வாழப்பாடியில் கைது

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை பகுடுபட்டு கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்2 படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 22ம் தேதி இரவு, தனது வீட்டில் கைகளை அறுத்தும், சேலையால் தூக்கிட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த மாணவியிடம் விசாரித்ததில், அவர் படித்து வரும் பள்ளியில் கராத்தே மாஸ்டரான, ஆத்தூர் அருகே சீலியம்பட்டியை சேர்ந்த ராஜா (46) என்பவர், மாணவிக்கு கடந்த மூன்றாண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது.

இதனால்,தான் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று திரண்டு வந்து சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்தனர். விசாரணையில், கராத்தே மாஸ்டரின் பாலியல் தொந்தரவு குறித்து 9ம் வகுப்பு படிக்கும் போதே மாணவி தனது வகுப்பாசிரியர் மூலம் பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் புகாரளித்துள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் அவரது பாலியல் சீண்டல் அதிகரித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளி உரிமையாளரான ஸ்டீபன் தேவராஜை, வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கராத்தே ஆசிரியர் ராஜா, பள்ளியில் படிக்கும் பல மாணவிகளுக்கு, இதே போல் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாணவியின் உறவினர்கள் சீலியம்பட்டியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ராஜாவை பிடித்து, கருமந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் வைத்தே அவரை ஆவேசமாக தாக்க முயன்றார். அருகில் இருந்த பொதுமக்களும் சரமாரியாக தாக்கினர். இதனால் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஸ்டீபன் தேவராஜ், ராஜா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: