அதிமுக ஆட்சியால் அரசு நிதி வீண் திறக்கப்படாத சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்-மேற்கு மரிய நாதபுரம் மக்கள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரத்தில் ரூ.18 லட்சம் செலவில் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில், ஆண், பெண் என இரண்டு சுகாதார வளாகங்கள் இருந்தது. அதனை அகற்றி விட்டு, உள்கட்டமைப்பு நிதியில் ரூ.18 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

ஆனால், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோல் பல லட்சங்கள் அரசு நீதி வீணாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், மக்கள் நலன்கருதி பொது சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: