சோத்துப்பாக்கத்தில் நூதனமுறையில் விற்பனை பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்

மதுராந்தகம்: சோத்துப்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்கள் 2 பிரியாணி வாங்கினால், அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நூதன விற்பனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது மழையால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு, தக்காளி வரத்து பெருமளவில் குறைந்துள்ளது.

இதனால், தக்காளி விலை காணப்படுகிறது. சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல்  150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்போடு காய்கறி மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் சென்று, காய்கறிகளை வாங்கி வருகின்றனர். தக்காளி விலை உயர்வால் ஓட்டல், இல்லத்தரசிகள் மட்டுமின்றி உணவகம், ஓட்டல், பிரியாணி கடைகள் நடத்துபவர்களும் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் இயங்கும் பிரியாணி கடையில், நேற்று வித்தியாசமாக அதிரடி ஆபர் அறிவித்து விற்பனை செய்யப்பட்டது. முழு பிரியாணி 2 வாங்கினால், அரை கிலோ தக்காளி இலவசம்.

அதுபோல ஒரு கிலோ தக்காளி பொதுமக்கள் கொடுத்தால், ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சலுகை நேற்று ஒரு நாள் மட்டுமே இருந்தது. இதனால், பிரியாணி கடையில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடைக்காரர்கள் கூறுகையில், அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். தக்காளி உள்பட காய்கறிகளின் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டுமானால், மக்கள் அனைவரும் தங்களது வீட்டு மாடியில் தோட்ட பயிர் செய்யலாம். அப்போது, இதுபோன்ற விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம் என்றனர்.

Related Stories: