கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் பணிநிரந்தரம் கோரி மனு-கலெக்டரிடம் வழங்கினர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பணிநிரந்தரம் கோரி கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டது. அதில் பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு என்பது உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

அதில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு பயிற்றுனர், இயன்முறை மருத்துவர், பகல்நேர காப்பக ஆசிரியர், உதவியாளர் ஆகிய நாங்கள் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2021 வரை தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்கிறோம், என்று தெரிவித்திருந்தார்.

மேலும், 2021 ஏப்ரல் மாதம் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில், அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இன்றைய சூழலில் பொருளாதார அடிப்படையில் பணிபுரிந்து சேவை செய்யவும், மாணவர்களை சென்று பார்வையிடவும் கடினமாக இருந்தாலும், பணி தொய்வு இல்லாமல் வேலை செய்து வருகிறோம். எனவே, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பான சேவைப் பணி செய்ய எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா திமிரி பேரூராட்சி மகாலட்சுமி நகர் ஆதியன் இனமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 20 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர், மின்சார வசதிகள் இல்லை. இதனால் எங்கள் குடியிருப்பு பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர், மின்சார வசதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதில், டிஆர்ஓ ஜெயசந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை ஆட்சியர் தாரகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: