வடகிழக்கு பருவமழையின் காரணமாக 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்: தமிழகத்தில் தடுப்பணைகளுக்கு விவசாயிகள் கோரிக்கை

வேலூர்: வடகிழக்கு பருவமழையின் கொடையால் பாலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது 1 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பாய்ந்தோடி செல்வதால் விவசாயிகள், மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்தியாவை பொறுத்தவரை அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை சீசனாகும். அதற்கேற்ப அக்டோபர் தொடங்கி தற்போது வரை நீடித்து வரும் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. இதனால் தென்மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் அனைத்து ஆறுகள், சிற்றாறுகள், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 70 சதவீத ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிறைந்துள்ளன.இதில் விசேஷமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமான பாலாறு கடந்த 1991ம் ஆண்டு கடைசியாக 1 லட்சம் கனஅடியை நெருங்கிய நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பிறகு தற்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியையும் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பாலாறு அன்னையின் இந்த ஆக்ரோஷ பாய்ச்சல் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத நிலை என்கின்றனர் பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள். அதேநேரத்தில் தற்போது அரசின் அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் உள்ள விவரப்படி கடந்த 1876ம் ஆண்டு பாலாற்றில் 501.93 கனஅடி வெள்ளம் ஓடியது. அதன்பிறகு இந்த அளவை தாண்டி முதல்முறையாக 1972ம் ஆண்டு 11 ஆயிரத்து 656 கனஅடி தண்ணீர் ஓடியது. அதை தொடர்ந்து 4 ஆண்டுகள் இடைவெளியில் 1975ம் ஆண்டு 12 ஆயிரம் கனஅடியும், 1991ம் ஆண்டு 98,128 கனஅடி வெள்ளம் ஓடியது.அதன்பிறகு 30 ஆண்டு கால இடைவெளியில் தற்போது (2021 நவம்பரில்) 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் பாலாற்றில் உபரியாக சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பொழிவு இருந்தது.

அதேநேரம் தற்போதைய சூழலை பயன்படுத்தி பாலாற்றில் தமிழக எல்லை தொடங்கி கடலில் கலக்கும் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் வரை ஆற்றின் இருகரைகளிலும் உருவாகியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பணைகளை கட்டுவதுடன், பாலாற்றின் சூழலை முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக கழிவுநீர், தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர், குப்பை கூளங்கள் என ஆற்றை மாசுப்படுத்தும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1903ம் ஆண்டின் வெள்ள அளவு சரியா?

1903ம் ஆண்டு பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு வாணியம்பாடி நகரமே துண்டாகி 200 பேர் வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அன்றைய கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு, பிரிட்டன் அரசர் 7ம் எட்வர்டுக்கு கடிதம் எழுதி தெரிவித்தார். அப்போது உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்த சம்பவம் அன்று உலகம் முழுவதும் பிரபலமான நாளிதழ்களில் செய்தியாகவும் வெளியானது. இந்த சம்பவத்தை நினைவு கூறும் நினைவுச்சின்னம் வாணியம்பாடி நகராட்சி சார்பில் நிறுவப்பட்டது.இவ்வாறு 200 பேர் வரை பலியானதுடன், நகரையே இரண்டாக பிளந்த இந்த வெள்ளம் தொடர்பான அளவீட்டில் 504.23 கனஅடி சென்றதாக பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அன்றைய சூழலில் இது அதிகமாகவும் இருக்கலாம். அல்லது தவறாகவும் இருக்கலாம்’ என்றனர்.

Related Stories: