80% பேருக்கு 2 டோஸ் போடுவது மட்டுமே இலக்கு பூஸ்டர் தடுப்பூசி இப்போது இல்லை: ஐசிஎம்ஆர் விஞ்ஞானி விளக்கம்

புதுடெல்லி: ‘இந்தியாவில் தற்போதைக்கு கொரோனாவை தடுக்க, பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய தேவையில்லை,’ என்று இ்நதிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தொற்று நோய் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. இதுவரையில் 120 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதே நேரம், மக்களிடம் தற்போது தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக வழங்கி வரும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல், 21 கோடி டோஸ்களுக்கும் மேல் அவற்றின் கையிருப்பில் இருக்கின்றன. இவற்றை விரைவாக மக்களுக்கு செலுத்துவதற்கான முகாம்களை நடத்தும்படி மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை தொடங்கும்படி ஒன்றிய அரசை சில விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய் பிரிவு தலைவரான சமிரன் பாண்டாவிடம் கேட்டபோது, ‘‘இப்போதைக்கு நாட்டின் 80 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளை போடுவதே முக்கிய இலக்காக இருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடுவது பற்றி, நாடு முழுவதிலும் இருந்து பெறப்படும் அறிவியல்பூர்வமான மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடியும். தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள், பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான அவசியம் இப்போது இல்லை என்பதையே காட்டுகின்றன,’’ என்றார்.

* 532 நாளில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

புதிதாக பாதித்தவர்கள்    10,488 பேர்

மொத்த பாதிப்பு    3.45 கோடி

புதிய பலி    313 பேர்

மொத்த பலி    4.65 லட்சம்

சிகிச்சை பெறுவோர்    1.22 லட்சம்

Related Stories: