பெங்களூரு: பெங்களூருவில் பொது இடத்தில் உடை அணிவது தொடர்பாக இளம்பெண்ணை மூதாட்டி ஒருவர் கண்டித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சமூக ஊடக பிரபலமான ஸ்ரேயான்சி, பொது இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், பெங்களூரு பொது சாலையில் சமீபத்தில் அவர் போட்டோஷூட் நடத்தினார். அப்போது அவர் குட்டையான பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை அணிந்திருந்தார்.
அங்கு வந்த மூதாட்டி ஒருவர், ஸ்ரேயான்சியின் உடையை பார்த்து ஆபாசமாக பேசுவது போலவும், அவரை கடுமையாக கண்டிப்பது போலவும் காட்சிகள் அரங்கேறின. இந்த மோதல் உச்சமடைந்த நிலையில், பிரச்னையை பெரிதாக்க விரும்பாத ஸ்ரேயான்சி, அந்த மூதாட்டியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி 14 லட்சம் பேருக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரேயான்சி கூறுகையில், ‘நான் என்னுடைய விருப்பப்படியே ஆடை அணிந்திருந்தேன். யாரிடமும் வீண் பிரச்னை செய்ய வேண்டாம் என்பதால் அமைதியாக மன்னிப்பு கேட்டு விலகிவிட்டேன்’ என்று கூறினார்.
