4வது நாளாக தேங்கிய மழைநீர், விழுந்த மரங்கள் அகற்றம் சென்னையில் 90% மீட்பு பணிகள் நிறைவு: 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: கனமழையின் காரணமாக தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் செயல்பாட்டால், 90 சதவீதம் மீட்பு பணிகள் முடிந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னையில் கடந்த 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சியின் சார்பில் நேற்று 4-வது நாட்களாக மீட்பு, தேங்கிய மழைநீர் அகற்றம் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன்படி 4வது நாளான நேற்று பெருங்குடி, புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ராம்நகர் 1வது தெரு, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பிரதான சாலை, செம்மஞ்சேரி குடியிருப்பு, அம்பத்தூர், அக்ரஹாரம், வடக்கு ரயில் நிலையம் சாலை உட்பட சென்னையில் மழைநீர்  தேங்கிய 778 இடங்களில் நேற்று வரை 574 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. அதைப்போன்று  கனமழையின்  காரணமாக சாலைகளில் விழுந்த 522 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியால்  பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 6 சுரங்க பாதைகளில் உட்பட 22  சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருந்த மழைநீர் முழுவதும் நேற்று அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

4வது நாளான நேற்று நடந்த பணிகளின் அடிப்படையில் சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 சதவீதம் மீட்புகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் மீட்பு பணிகள் இன்று முடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க ஏதுவாக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில்  உள்ளன. அதில் தற்பொழுது 69 நிவாரண மையங்களில் 3,492க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: