சவுகார்பேட்டையில் அரை கிலோ தங்கம் கைவரிசை நேபாள எல்லையில் கொள்ளையன் கைது

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நித்திஷ் குமார் ஜெயின் (40). மின்ட் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 24ம் தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த நகை கண்காட்சிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீடு திரும்பினார். அப்போது, அவரது மனைவி சிவானி கை, கால்கள் கட்டப்பட்டு, வாய் அடைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மீட்டு விசாரித்தபோது, வீட்டு வேலைக்காரன் மற்றும் இதற்கு முன்பு வேலை செய்த வீட்டு வேலைக்காரன் மற்றொரு நபர் என 3 பேர் சேர்ந்து, தன்னை கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த அரை கிலோ தங்க நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கொத்தவால்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். செல்போன் சிக்னலை வைத்து சோதனை செய்தபோது, கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சந்தன்குமார் மண்டல் (23), நேபாள எல்லையில் இருப்பது தெரிந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 343 கிராம் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: