மக்களை மதிக்காத அதிகாரிகள் கலெக்டர் முகாம் ஆபீஸ் முன் பாஜக எம்எல்ஏ தர்ணா: மத்தியபிரதேசத்தில் பரபரப்பு

போபால்: மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆளுங்கட்சி பாஜக எம்எல்ஏ ஒருவர், கலெக்டர் முகாம் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் சந்த்லா தொகுதி ஆளும் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் பிரஜாபதி, புர்ஹான்பூர் கலெக்டர் ஷிலேந்திர சிங்கின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகம் முன்பாக நேற்று மாலை திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘மாவட்ட அதிகாரிகள் மக்கள் பிரச்னைகள் குறித்து கேட்பதில்லை. ெபாதுமக்கள் பிரச்னை தொடர்பாக கலெக்டரை சந்திப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தேன். ஆனால், அவர் முதல்வரின் வீடியோ கான்பரன்சிங்கில் இருப்பதாக தெரிவித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஆனாலும், கலெக்டரை சந்திக்க முடியவில்லை.

ஆனால் வீடியோகான்பரன்ஸ் கூட்டம் முடிந்த பிறகு, கலெக்டர் அவரது பங்களாவிற்கு சென்றார். அதையடுத்து அங்கு சென்று பார்த்த போது, அவரது உதவியாளர்கள் என்னை தடுத்தனர். மாநில அரசானது தலித், பழங்குடியினர் மற்றும்  விவசாயிகளுக்கு ஆதரவாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், அதனை அதிகாரிகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை’ என்றார். எம்எல்ஏவின் தர்ணாவை தொடர்ந்து அங்குவந்த போலீஸ் அதிகாரிகள், அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இதனால், கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: