முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறப்பு; கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..!!

ஈரோடு: பவானிசாகர் அணை முழு கொள்ளளவை நெருங்கியதை அடுத்து பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் 104 அடி வரை நீர் தேக்கலாம். அணைக்கு வினாடிக்கு 6,746 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் 103.80 அடியை எட்டியது.

32.8 டி.எம்.சி. மொத்த கொள்ளளவு கொண்ட அணையில் நீர் இருப்பு 31.79 டி.எம்.சி. ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தொடர்ந்து, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தது.

ஆற்றில் துணிகள் துவைக்கவோ, குளிக்கவோ யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பவானிசாகர் அணை முழுமையாக நிரம்பும் சூழல் இருப்பதால் உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: