சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 13 காவலர் பேரிடர் மீட்பு குழு: 6 சுரங்கப்பாதை மூடல்; கமிஷனர் நேரில் ஆய்வு

சென்னை: பருவ மழை காரணமாக சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 13 காவலர் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  அதிகளவில் மழை நீர் தேங்கியுள்ள ஈவெரா சாலையில் உள்ள கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை என 6 சுரங்கப்பாதைகள் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தற்காலிகமாக தடை செய்துள்ளனர். பருவ மழையின் சீற்றத்தால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது.

போக்குவரத்துக்கு தடையாக உள்ள பகுதிகளில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார், சென்னை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 13 காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆய்வாளர் தலைமையில் இயங்கும் இந்த குழுவில் ஆயுதப்படை காவலர்கள், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு காவலர் மீட்பு பேரிடர் மீட்பு குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராஜரத்தினம் மைதானத்தில் தயார் நிலையில் ஒரு மீட்பு குழுவினர் என மொத்தம் 13 காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் அவர்களுக்கு தேவையான பொருட்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார். அதைத் தொடர்ந்து, அவர் மழையால் பாதித்துள்ள பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து, பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ள ஈவெரா சாலையில் உள்ள கங்கு ரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதைகள் என மொத்தம் 6 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* போக்குவரத்து மாற்றம்

ஈவெரா சாலையில் இருந்து காந்தி இர்வின் பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவிகே சம்பத் சாலையில் வேப்பேரி காவல் நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. பாந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக பாந்தியன் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மார்ஷல் சாலையில் இருந்து பாந்தியன் ரவுண்டனாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆற்காடு சாலை 80 அடி சாலையில் இருந்து ராஜமன்னார் சாலை செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் சூழ்நிலைக்கேற்ப திருப்பி விடப்பட்டுள்ளது. மழையால் சித்தரஞ்சன் சாலை, தணிகாச்சலம் ரோடு, கச்சேரி சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. கன மழை காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து மிதமான வேகத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: