அதிமுகவை மீட்டெடுப்பதில் என்னுடைய பாதை வேறு சசிகலாவின் பாதை வேறு: டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவை மீட்டெடுப்பதில் என்னுடைய பாதை வேறு, சசிகலாவின் பாதை வேறு என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு டி.டி.வி.தினகரன் கட்சி ரீதியான கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், நவம்பர் 6ம் தேதி முதல் மூன்று நாட்கள் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என டி.டி.வி.தினகரன் அறிவித்தார். அதன்படி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முதல் நாளான நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், சட்டப்பேரவை மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கான காரணம், சசிகலாவின் நடவடிக்கைகள், சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசிய கருத்துகள் குறித்து மற்றும் மாவட்டம் தோறும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 19 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாளையுடன் ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மண்டலம் வாரியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க  கூட்டத்தை நடத்தியுள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்  வருவதால் அது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு காரணம்  என்ன என்பது குறித்து எனக்கே தெரியும். இதுகுறித்து ஏற்கனவே கட்சி  நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக  உருவாக்கப்பட்டது. தோல்வியால் நாங்கள் துவண்டுபோய்விடவில்லை. என்னுடன்  இருப்பவர்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே எங்களுடன் உள்ளார்கள். சசிகலா  எங்களுடன் தான் இருக்கிறார்.

நாங்கள் தேர்தல் வெற்றி மூலமாகவே அதிமுகவை மீட்டெடுப்போம். சசிகலா பொதுச்செயலாளர் என்ற முறையிலேயே சட்டரீதியாக அதிமுகவை மீட்டெடுக்க போராடுகிறார். என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு. ஆனால், எங்களின் இலக்கு ஒன்று தான். ஓ.பன்னீர்செல்வம் எதையுமே நிதானமாக,  சிந்தித்து,யோசித்து பேசக்கூடியவர். தொண்டர்களின் விருப்பத்தை தான் தலைமை பேசும். அதுபோல தான் ஓ.பன்னீர்செல்வமும் பேசியிருக்கலாம். எனவே, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அவர் சரியாக தான் கூறியிருக்கிறார். எடப்பாடி தவழ்ந்து வந்து பதவி பெற்றதை யாரும் மறுக்க முடியாது. பழனிசாமி ஏற்கனவே நொந்துபோய் உள்ளார். அவர் இப்போது பலவீனமாக இருக்கிறார். அவர் தடுமாறி போய் பயத்திலும் தான் இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

Related Stories: