இடைத்தேர்தலில் தோல்வியே பெட்ரோல், டீசல் வரியை ஒன்றியஅரசு குறைக்க காரணம்: எஸ்டிபிஐ கட்சி தலைவர் அறிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5, டீசல் மீதான கலால் வரியில் ரூ.10 குறைப்பதாக அறிவித்ததுள்ளது. பெட்ரோல்-டீசலின் தொடர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தியால் நடந்து முடிந்த பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜ தோல்வியை தழுவியது. உ.பி., கோவா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களின் அதிருப்தியை சமாளிக்க இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஒன்றிய பாஜ அரசு மேற்கொண்டுள்ளது. மோடியின் ஆட்சியில் ரூ.60 வரை விலை உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையில் எதிர்வரும் தேர்தலுக்காக மட்டுமே இந்த மிகக்குறைந்த விலைக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மிகக்குறைந்த விலை குறைப்பால் எரி பொருட்களின் நுகர்வு அதிகரித்து பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர, மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. மேலும், கூடுதலான வரி குறைப்பு இருந்தால் மட்டுமே அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: