மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், மகனுக்கு சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மும்பை: மகாராஷ்டிரா மாநில துணை முதலவரும் நிதி அமைச்சருமான அஜித் பவாருக்கும் அவர் மகன் பார்த் பவாருக்கும் சொந்தமான ரூ.1400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். இந்த சொந்துக்கள் முறையாக சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டது என்று நிரூபிக்க வேண்டும் என்றும் அதுவரை அந்த சொத்துக்களை விற்கமுடியாது என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. சதாராவில் உள்ள ரூ.600 கோடி மதிப்புள்ள சர்க்கரை ஆலை, கோவாவில் உள்ள ரூ.250 கோடி மதிப்புள்ள நிலையை என்ற ரெசார்ட், நாரிமண்ட் பாயிண்டில், நிர்மல் டவரில் பார்த் பவாருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பு அலுவலகம், டெல்லியில் ரூ.20 கோடி மதிப்புள்ள வீடு, மாநிலம் முழுவதும் 24 இடங்களில் இருக்கும் ரூ.500 கோடி மதிப்பு நிலங்கள் ஆகியன முடக்கப்பட்ட சொத்துக்கள் ஆகும்.கடந்த மாதம் அஜித் பவாருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது பற்றி அப்போது அஜித் பவார் கூறியதாவது: எனக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது மூன்று சகோதரிகளுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இது எனக்கு பெரும் கவலையை தந்துள்ளது. எனது சகோதரிகளுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் வேறு இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.

இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட சோதனையாகும். அவர்கள் கீழ்தரமான அரசியில் நடத்துகிறார்கள். இது தப்பு. நாங்கள் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறோம். நான் நிதி அமைச்சராக இருக்கிறேன். எனவே நிதி மற்றும் வரி பற்றி எல்லாம் தெரியும். இவ்வாறு அஜித் பவார் கூறியிருந்தார். இந்த நிலையில் அஜித் பவாருக்கும் அவருடைய மகன் பார்த் பவாருக்கும் சொந்தமான ரூ.1400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியிருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories: