நீங்கெல்லாம் என்ன போலீஸ்? திப்பு சிம்மாசனம் என்று சொன்னால் நம்பி விடுவீர்களா?...கேரள உயர் நீதிமன்றம் ‘செம குட்டு’

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சியில் பழங்கால புராதன பொருட்கள் இருப்பதாக கூறி,  பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த மோன்சன் கைது செய்யப்பட்டார்.  இவர் மீது 2 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடன் முன்னாள்  மற்றும் தற்போதைய டிஜிபிக்கள் உள்பட ஏராளமான உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.  இந்நிலையில், மோன்சனிடம் பணி புரிந்த அஜித் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மோன்சனுக்கு எதிராக புகார் கொடுத்ததால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது,’ என குறிப்பிட்டார்.

இந்த  மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், மோன்சன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்யும்படி  டிஜிபி அனில்காந்துக்கு உத்தரவிட்டார்.  அதன்படி, போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த பிறகு நீதிபதி கூறியதாவது: அறிக்கையை  படித்தபோது போலீஸ் மீது பல சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த 2019ல்  போலீஸ் உயரதிகாரிகள் மோன்சனின் வீட்டிற்கு  சென்றுள்ளனர்.

திப்பு சுல்தானின் சிம்மாசனம்,  முகமது நபிகள் பயன்படுத்திய பாத்திரம் என அவர் கூறியதை நம்பி விடுவீர்களா? புராதன  பொருட்களை வைத்திருக்க லைசென்ஸ் உள்ளதா? என்று கேட்டிருக்க வேண்டாமா?மோன்சனுக்கு எதிராக விசாரணை நடத்தும்படி 2019  மே மாதம் டிஜிபி  உத்தரவிட்டுள்ளார். 2 மாதங்களுக்கு பின்னர்தான்  உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: