குஜராத்தில் உணவகமாக மாற்றப்பட்ட ஏர்பஸ் 320 விமானம்!: ஆர்வமுடன் படையெடுக்கும் மக்கள்...செல்பி எடுத்து உற்சாகம்..!!

காந்திநகர்: குஜராத்தின் வதோதரா நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விமான உணவகம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. வதோதராவை சேர்ந்த மஃமுத் பாய் முக்கி என்பவர் பயன்பாட்டில் இல்லாத ஏர்பஸ் 320 என்ற விமானத்தை வாங்கி அதனை உணவகமாக மாற்றியுள்ளார். டர்சாலி என்ற பகுதியில் செயல்படும் இந்த உணவகத்தில், விமானத்தில் பயணிக்கும் முன்னர் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்டிங் பாஸை போன்ற வாடிக்கையாளரின் பெயர், இருக்கை எண் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உணவை பரிமாறும் ஊழியர்கள் விமான பணியாளர்கள் போன்று உடை அணிந்து வலம் வருகின்றனர்.

இந்த விமானம், விமானத்தில் பயணிப்பதை போன்ற உணர்வை தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் இருந்து விமானத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக லாரி மூலம் குஜராத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இணைக்கப்பட்டதாக உணவக உரிமையாளர் முக்கி கூறுகிறார். விமான உணவகத்தில் சீனா, இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உணவுகள் கிடைக்கிறது. வித்யாசமாக இருப்பதால் விமான உணவகத்திற்கு படையெடுக்கும் மக்கள், உணவருந்திய பின்னர் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Related Stories: