யார் மனதும் புண்படும்படி பேச வேண்டாம்: கட்சியினருக்கு எடப்பாடி அறிவுரை

சேலம்: யார் மனதும் புண்படும்படி பேச வேண்டாம் என்று சேலத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது: மாநகராட்சி தேர்தல் விரைவில் வர இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலின்போது எவ்வாறு பூத் கமிட்டி அமைத்து பணியாற்றினோமோ, அதே போல மாநகராட்சி தேர்தலிலும் பணியாற்ற வேண்டும்.

அத்தேர்தலில் கூட சில இடங்களில் சிறப்பாக பணியாற்றவில்லை என்றாலும் வெற்றி பெற்றுவிட்டோம். நம்மிடம் வேற்றுமை இருக்கக் கூடாது. ஒரு வார்டில் ஒருவருக்குத்தான் சீட் கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்வதோ, சுயேட்சையாக நிற்கவோ கூடாது. இன்னும் 10 நாளில் பகுதி செயலாளர்களை அழைத்து  பேசுவேன். பூத் கமிட்டி அமைத்து அதில் அவர்களின் பெயருடன் செல்போன் நம்பரையும் வைத்திருக்க வேண்டும். காலையில் 2 பகுதி, மாலையில் 2 பகுதி என பூத் கமிட்டியை அழைத்து நானே பேசுவேன்.

எனக்கு வயிற்று வலி இருக்கிறது. வலியையும் பொருட்படுத்தாமல் உங்களிடம் பேசுகிறேன். ஏனென்றால் நமக்கு வெற்றி முக்கியம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரைப்பற்றியும் தவறாக பேசவேண்டாம். ‘‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். தீயில் சுட்டப்புண் ஆறிவிடும், கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணரவேண்டும். யாரையும் தவறாக பேச வேண்டாம். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* மக்கள் மனசே புரியவில்லை...

‘‘கடந்த காலங்களில் மக்களிடம் ஓட்டுக் கேட்டால் உங்களுக்கு மட்டுமே ஓட்டுப்போடுவேன் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது யார் கேட்டாலும் உங்களுக்கு ஓட்டுப்போடுகிறேன் என்கிறார்கள். சுயேட்சையிடமும் அப்படியே கூறுகிறார்கள். ஆனால் ஓட்டு யாருக்கு போடுகிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஸ்கேன் எடுத்தார்கள், பிளட் டெஸ்ட் எடுத்தார்கள். தற்போது அட்மிட் ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு வியாதியை கண்டுபிடிக்கவே இத்தனை டெஸ்டுகள் எடுக்க வேண்டியதிருக்கும்போது, மக்கள் மனசை எப்படி புரிந்து கொள்வது,’’ என்றும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories:

More
>