டிடிவி மகள் திருமண வரவேற்பு ஓபிஎஸ் சகோதரர் பங்கேற்பு: அதிமுகவினர் கடும் அதிர்ச்சி

தஞ்சை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பூண்டிகிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமனாத துளசி அய்யா வாண்டையாருக்கும் கடந்த செப்.16ம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று தஞ்சை அருகே பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இதில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சிறிது நேரம் மேடையில் அமர்ந்திருந்த சசிகலா பின்னர் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திடீரென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை டிடிவி தினகரன் இருகரம் கூப்பி வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் மேடையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.  அதிமுகவில் சசிகலா சேர்த்து கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என பதிலளித்திருந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா டிடிவி மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது அதிமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரர் ஓ.ராஜாவிடம் முக்கிய தகவல்களை சொல்லி அனுப்பியதாகவும் தெரிகிறது. அதை அவர் டிடிவியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.  

* தஞ்சையில் 3 நாட்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழாவில் நாளை சசிகலா கலந்து கொள்வதாக தெரிகிறது. பின்னர் மீண்டும் தஞ்சை வரும் அவர் நவம்பர் 1 வரை 3 நாட்கள் தங்கி சுற்றுப்பயணம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. அதன்பின் அவர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாம்.

Related Stories:

More
>