தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளில் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

புதுடெல்லி: தமிழகத்தில் இருக்கும் 11 மருத்துவக் கல்லூரிகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டு என ஒன்றிய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியாவிடம், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று டெல்லியில் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார். டெல்லி விக்யான் பவனில் சுகாதாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் சார்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறுகையில்,‘‘ கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. குறிப்பாக இந்தியாவில் தடுப்பூசி போடுவது குறித்து இருந்தது. அதில் முதல் தவனை அனைத்தையும் நவம்பர் இறுதிக்குள் முடித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று இரண்டாவது தடுப்பூசிக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு யார் யாருக்கு போட வேண்டும் என்ற நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தை பொருத்தமட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி மாநிலத்திற்கு தேவையான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் 11 மருத்துவக் கல்லூரிகளில் முழு மாணவர் சேர்க்கை குறித்து தெரிவித்துள்ளொம். கண்டிப்பாக இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டுமாந வேலை, கோவையில் புதிய எய்ம்ஸ் கல்லூரி திறப்பது, மாநிலம் முழுவதும் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும், கோவாக்சின் தடுப்பூசியை பொருத்தமட்டில் தமிழகத்தில் 12லட்சம் பேர் இரண்டாவது டோசுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் 10லட்சம் தடுப்பூசியை விரைந்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதில் 18வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதுகுறித்து மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பதும் கேட்டறிப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். குறிப்பாக 19 மாவட்ட அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த ஒவ்வொன்றுக்கும் ரூ.50 கோடி என்று, மொத்தமாக ரூ.950 கோடி நிதி வழங்க வேண்டும். செங்கல்பட்டு, மற்றும் குன்னூர் தடுப்பூசி நிறுவனங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விரைந்து செய்து தர வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டு அதுகுறித்த கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: