லக்கிம்பூரில் நடந்த வன்முறையை 23 பேர் தான் பார்த்தார்களா? உபி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறையை 23 பேர் தான் நேரில் பார்த்தார்களா? என உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாக கேட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் அருகே  ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற பாஜ தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் மீது கார் ஏற்றப்பட்டதில்  4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாஜ.வினர் மீது விவசாயிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற வழக்கில் அஜஸ் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த கொலையில் 2 வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் நான்கு பேரிடம் தான் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதா?’ என கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கு நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹேமா கோலி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் கரிமா பிரசாத் ஆஜராகி, ‘இந்த வழக்கு தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்,’ என தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘அதை நாங்கள் பரிசீலனை செய்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை தவிர மற்ற சிலரையும் ஏன் போலீஸ் காவலில் வைத்துள்ளீர்கள்?’ என கேட்டார். அதற்கு, \”7 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது,’ என கூடுதல் சொலிசிட்டர் கரிமா தெரிவித்தார்.

இதையடுத்து, உபி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வ், ‘இந்த வழக்கில் மொத்தம் 69 சாட்சியங்களில் 30 பேரின் வாக்குமூலங்கள் 164 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 23 பேர் வன்முறையை நேரில் பார்த்தவர்கள்,’ என கூறினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘என்ன...? நூற்றுக்கும்  மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்றபோது நடந்த வன்முறையை வெறும் 23 பேர் மட்டும் தான்  நேரடியாக பார்த்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை,’ என காட்டமாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஹரிஷ் சால்வே, ‘பல ஊடங்களின் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால், அது குறித்து இன்னும் பதிவு செய்யப்படவில்லை. லக்கிம்பூர் வன்முறை வழக்கில் தொடர்புடைய கார், அதில்  பயணம் செய்தவர்களின் ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அது குறித்து ஆய்வு நடந்து வருகிறது,’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், ‘‘இந்த வழக்கை பொருத்தமட்டில் உள்ளூர் மக்கள் உட்பட 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் அடங்கிய கூட்டம் இருந்ததாக உங்கள் வழக்கின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இதில் குற்றவாளிகளை அடையாளம் காண்பது ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது. அதை நீதிமன்றமும் ஏற்காது,’ என தெரிவித்தார். அப்போது, மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘இந்த சம்பவத்தில் சாட்சியங்கள் யாரேனும் காயம் அடைந்துள்ளார்களா?’ என கேட்டார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் மிகவும் முக்கியம். அதை மாநில அரசு தவற விடக்கூடாது. இதில், 23 பேர் வன்முறையை நேரில் பார்த்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் 164 சட்டப்பிரிவின் கீழ் நேரடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும்,’ என கூறிய நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* 4 பேரை அடித்து கொன்றது தொடர்பாக தனி அறிக்கை

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘விவசாயிகள் கொல்லப்பட்ட பிறகு மூன்று  பேர் அடித்துக் கொள்ளப்பட்டதாக தொடரப்பட்ட எதிர் வழக்கு, பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு தனித்தனியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என்றும் தெரிவித்தனர்.

Related Stories:

More
>