பாக். கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மருத்துவ மாணவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: சர்ச்சைக்குரிய கோஷமிட்ட 6 பேரிடம் விசாரணை

ஜம்மு: உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மருத்துவ மாணவர்கள் மீது ‘உபா’ எனப்படும், ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்’ கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துபாயில் நடக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 24ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. காஷ்மீரின் ஸ்ரீநகரில், கரண் நகர் மற்றும் ஸ்கிம்ஸ் சவுரா ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சிலர் இந்த வெற்றியை வெடி வெடித்து கொண்டாடினர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மருத்துவ மாணவர்கள் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் நேற்று தெரிவித்தனர். இதே போல், ஜம்முவின் சம்பா கிராமத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய சிலர் சர்ச்சைக்குரிய வகையில் கோஷமிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் காஷ்மீரில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மீதான வழக்கை சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தினர், ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ‘இது ஒன்றிய அரசின் பழிவாங்கும் செயல். இத்தகைய செயல் காஷ்மீர் இளைஞர்களை மேலும் அந்நியப்படுத்தும்,’ என கண்டனம் தெரிவித்துள்ளார். இதே போல், பஞ்சாப்பில் சில கல்லூரிகளில் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடினர். இதனால், கல்லூரி விடுதியில் உள்ள மற்ற மாணவர்கள் அவர்களை தாக்கிய வீடியோக்களும் வைரலாகி உள்ளன.

* இந்திய மரபணு இல்லாதவர்கள்

அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், ‘‘பாகிஸ்தானின் வெற்றியை இந்தியாவில் வெடி வெடித்து கொண்டாடுபவர்களின் மரபணு நிச்சயம் ஒரு இந்தியருடையதாக இருக்காது. நம் சொந்த நாட்டில் மறைந்திருக்கும் இதுபோன்ற துரோகிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’ என டிவிட்டரில் தெரிவித்தார்.

Related Stories: