சிஆர்பிஎப் முகாமில் தங்கி கலந்துரையாடல் காஷ்மீர் பயணத்தை திடீரென ஒரு நாள் நீட்டித்த அமித்ஷா: புல்வாமா வீரர்களுக்கு அஞ்சலி

ஸ்ரீநகர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீருக்கு 3 நாள் பயணமாக சென்றார். கடந்த திங்களன்று சுற்றுப் பயணத்தை முடித்து டெல்லி திரும்ப வேண்டிய அவர், தனது பயணத்தை திடீரென மேலும் ஒரு நாள் நீட்டித்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் புல்வாமாவின் லெத்போராவில் உள்ள சிஆர்பிஎப் வீரர்கள் முகாமில் தங்கினார். முகாமில் இருந்த வீரர்களோடு கலந்துரையாடினார். தொடர்ந்து, நேற்றும் ஜம்முவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடந்த 2019, பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள்  சென்ற வாகனம் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம்  அடைந்தனர். இவர்களின் நினைவிடத்துக்கு நேற்று சென்ற அமித்ஷா, மலர்வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக நீங்கள் செய்த உயிர் தியாகம், தீவிரவாதத்தை வேரோடு அகற்றுவதற்கான எங்களின் தீர்மானத்தை வலிமைப்படுத்துகிறது. வீர  தியாகிகளுக்கு எனது அஞ்சலி,’ என கூறியுள்ளார்.

* கையெறி குண்டு தாக்குதல் பொதுமக்கள் 6 பேர் காயம்

ஜம்முவின் பண்டிப்போரா மாவட்டத்தில் சம்பால் பகுதியில் பேருந்து நிலையம் அருகே ராணுவ ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் நேற்று கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், குறி தப்பியதில் வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்தது. இதில், பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: