இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்…

இந்தூர்: இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதால் பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகரான இந்தூர் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதி கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. மக்களவையின் சபாநாயகராக இருந்த பாஜகவின் சுமித்ரா மகாஜன் இங்கே 8 முறை தொடர்ந்து வெற்றிபெற்றார்.

கடந்த 2019 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜகவின் ஷங்கர் லால்வானி 5.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் பங்கஜ் சங்வியைத் தோற்கடித்தார். இந்த முறையும் பாஜக சார்பில் லால்வானி போட்டியிடுகிறார். திடீர் திருப்பமாக, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 29ம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் போட்டியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவரது முடிவு காங்கிரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதனால், வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக நோட்டாவுக்கு வாக்களிக்க ஆட்டோவில் ஒட்டிய விளம்பரத்தை பாஜக கவுன்சிலர் சந்தியா யாதவ் கிழித்ததைத் தொடந்து அவர் மீது காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. கடந்த மாநகராட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் இந்தூர் வாக்காளர்கள் பாஜகவுக்கு வெற்றியை தந்துள்ள நிலையில், ஊழல்வாதிகள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள் என்றும், தேச நலனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பாஜகவும் பதிலுக்கு பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தூர் தேர்தல் களம் நோட்டோவை மையப்படுத்தி நகர்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

The post இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்… appeared first on Dinakaran.

Related Stories: