சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் திடீர் மோதல் வெடித்தது: எடப்பாடி மீது ஓபிஎஸ் தாக்கு; மதுரையில் பேட்டி கொடுத்த சிறிது நேரத்தில் ஜெயக்குமார் பதிலடி

மதுரை: சசிகலா விவகாரம் தொடர்பாக எடப்பாடியை ஓபிஎஸ் தாக்கி பேசினார். இதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பிரச்னையால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. கடந்த 16ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தினார். 17ம் தேதி தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு  இல்லத்திற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என பெயர் பொறித்த கல்வெட்டைதிறந்தார். இதுபற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ‘‘அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார்.

அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது. அதிமுகவை கைப்பற்றுவேன் என்று கூறுவது, சூரியனை பார்த்து ஏதோ குரைப்பது போன்றுதான்..’’ என்று ஆவேசமாக பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சசிகலாவை கடுமையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக சசிகலா மீது, அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குறித்து எந்த பதிலையும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார்.

 இந்நிலையில், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக்கவசத்தை பெற்றுத் தரும் பணிக்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை வந்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில், ‘‘அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்’’ என்றார்.

 அப்போது நிருபர்கள், ‘‘சசிகலா குறித்து எடப்பாடி சர்ச்சைக்குரிய முறையில் விமர்சித்து பேசியிருக்கிறாரே’’ என்றனர். அதற்கு ஓபிஎஸ், ‘‘அரசியலில் நாகரீகம், பண்பாட்டுடன் பேச வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை.  இதை  தொண்டன் மதுல் தலைவர் வரை கடைபிடிக்கவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு’’ என்றார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், மணிகண்டன், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தலைவராக இருந்தாலும் நாகரீகம், பண்பாட்டுடன் பேச வேண்டும் என்று சொன்னது, எடப்பாடி பழனிச்சாமியைத்தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டி அளித்த சிறிது நேரத்தில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘சசிகலா ஆடியோவில் நிறைய பேரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதிமுக கட்சியில் பெரிய பொறுப்பில் இல்லாமல், கட்சியில் இருப்பவர்களிடம் பேசினார். இது தலைமை கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன், சசிகலாவிடம் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம்.

தலைமை கழகத்தை பொறுத்தவரை சசிகலாவுடனோ, அவர்களை சார்ந்தவர்களுடனோ எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால், கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தினோம். அதை ஒரு தீர்மானமாகவே கொண்டு வந்தோம். தீர்மானத்தில் மாவட்ட செயலாளர், தலைமை நிர்வாகிகள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

அதன்பிறகு இபிஎஸ் அமைச்சரவையில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் வைத்த கோரிக்கை, எந்த காரணத்தை கொண்டும், எந்த காலத்திலும் சசிகலாவோ, அவரை சார்ந்தவர்களோடு எந்தவித உறவும், தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றால் மட்டுமே நாங்கள் சேருவோம் என்று ஓபிஎஸ் சொன்னார். பொதுவாகவே, அவர் தர்மயுத்தம் நடத்தினதே சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான். ஜெயலலிதா மரணத்துக்கு ஒரு நீதி கேட்டு, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் தர்மயுத்தத்தை தொடர்ந்தார்.

இப்படி அவர் சொல்லி இருக்கும் நிலையில், அதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை. அதிமுக பொதுக்குழுவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப்பட்டனர். அதன்பிறகும் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கையெழுத்து போட்டு, இனி எந்த காலத்திலும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் நீக்கப்படுவார்கள் என்று தீர்மானம் போடப்பட்டு வெளியிடப்பட்டது. நான், ஓபிஎஸ் அளித்த பேட்டியை முழுமையாக கேட்கவில்லை. கடந்த காலத்தில் நடந்ததை சொன்னேன். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால்தான், நான் (ஜெயக்குமார்) சசிகலா பக்கம் போவேன்.

அது நடந்தால், இது நடக்கும். 2016ல் சசிகலா தான் எனக்கு மந்திரி பதவி கொடுத்ததாக செய்திகள் வெளிவருகிறது. 2016ல் என்னை அமைச்சராக்கினது ஜெயலலிதா தான். அதனால் 2021 வரை அமைச்சராக தொடர்ந்தேன். சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். நான் கடந்த காலத்தில் ஓபிஎஸ் சொன்ன தகவலை கூறினேன். மற்ற முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார். ஜெயக்குமாரின் இந்த பேட்டி அதிமுக தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. மொத்தத்தில், சசிகலாவின் நடவடிக்கையால், அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மறைமுக மோதல் தொடர்ந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதை மனதில் வைத்தே சசிகலா, அதிமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறி கட்சிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நேற்று மதுரையில், ஓபிஎஸ் பேட்டி அளித்தபோது, அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போன்றவர்கள் உடன் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் தற்போது சசிகலா பக்கம் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* எடப்பாடி படம் ‘மிஸ்சிங்’

ஓபிஎஸ் வருகையை ஒட்டி மதுரை அண்ணாநகர் பகுதிகளில் அதிமுகவினர் 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை. ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் படங்களே இருந்தன. இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories: