மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு மறுகுடியமர்வு கொள்கை வகுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்

சென்னை: மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு மறுகுடியமர்வு கொள்கை வகுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்டங்களுக்கான சிறப்பு கூட்டம் தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை வகித்தார். மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: தமிழக அரசு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கையை உருவாக்க பரிசீலித்து வருகிறது. இந்த வரைவு குறித்து எந்த மாவட்டத்திலும் மக்களின் கருத்தறியும் கலந்தாய்வு கூட்டம் எதையும் நடத்திடாமல் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை வரைவு முறையை அமல்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வருவது ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து தமிழகத்தில் குடிசைப்பகுதி மக்கள் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களிலிருந்து மறுகுடியமர்வு செய்யப்படும் போது அந்த மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்து நியாயமாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அப்பகுதி மக்களின் எதிர்கால வாழ்வாதார நலனை கவனத்திற்கொண்டு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: