டி20-யில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி.! இறுதிபோட்டியில் முடிவை மாத்துவோம்: சசிதரூர், கெஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: துபாயில் நடந்த டி20-யில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளனர். துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் போட்டியில் பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை தோற்கடித்து சாதித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றதை யாரும் எதிர்பாராத நிலையில், நாட்டின் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் பணிகளுக்கு மத்தியில் சில டுவிட்டுகளை பகிர்ந்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், இந்த போட்டியை பார்ப்பதற்காக துபாய்க்கே சென்றார்.

இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஏமாற்றத்துடன் கூடிய சில மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்தன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியா அணி பாகிஸ்தானிடம் தோற்கடிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். இறுதிப் போட்டியில் இந்த முடிவை நாம் மாற்றியமைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வெற்றி - தோல்வி என்பது விளையாட்டின் ஒருபகுதி. எனவே, வீரர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராக வேண்டும். வரவிருக்கும் போட்டிகளில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>