உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப் மூலம் வக்கீல்களுக்கு தகவல்: தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு

புதுடெல்லி: வாட்ஸ்அப் மூலம் உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பான தகவல்கள் வக்கீல்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். உச்சநீதிமன்ற வழக்கு தொடர்பான விவரங்களை அனுப்பி வைக்க வாட்ஸ்அப்பை, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சேவைகளுடன் ஒருங்கிணைப்பது குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 9 நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. அதன்பிறகு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில்,’ உச்ச நீதிமன்றத்தின் 75 வது ஆண்டில் ஒரு சிறிய முயற்சி தொடங்கப்படுகிறது. இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சர் நம் அன்றாட வாழ்வில் எங்கும் நிறைந்த சேவையாக உள்ளது. ஒரு சக்திவாய்ந்த தகவல் தொடர்பு கருவியாக பங்கு வகிக்கிறது. நீதியை அணுகுவதற்கான உரிமையை வலுப்படுத்தவும், நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகளுடன் வாட்ஸ்அப் செய்தி சேவைகளை ஒருங்கிணைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை அதில் ஆஜராகும் வக்கீல்கள் வாட்ஸ்அப்பில் பெறுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் எண் 8767687676 ஆகும். ஆனால் இந்த எண் எந்த செய்திகளையும், அழைப்புகளையும் பெறாது’ என்றார்.

The post உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப் மூலம் வக்கீல்களுக்கு தகவல்: தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: